தரையிறங்கிய மேக கூட்டம்
கொடைக்கானல் : கொடைக்கானலில் தரையிறங்கிய மேக கூட்டத்தை பயணிகள் ரசித்தனர். குளு குளு நகரான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். சில தினங்களுக்கு முன் மிதமான மழை பெய்தது.இதையடுத்து காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கமின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நகர் பகுதியில் ஆங்காங்கே தரையிறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். நகரில் ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் ஏரியை தழுவிச் சென்ற மேக கூட்டத்திற்கிடையே பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.