ஆத்துார் நீர்த்தேக்க பகுதியில் சிறுத்தை: விவசாயிகள் அச்சம்
ஆத்தூர்:திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் நீர்த்தேக்க பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகள் இங்கு அதிகம். இவை வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. இச்சூழலில் 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்துள்ளது.இரு நாட்களுக்கு முன் ஆத்துாரைச் சேர்ந்த ரவிக்கு சொந்தமான தோட்ட வரத்து வாய்க்காலில் சிறுத்தை ஒன்று கடந்து சென்றதை பார்த்துள்ளார். இதுபோல் பழனிசாமி என்பவரின் தோட்டத்தில் சிறுத்தையால் ஆடு வனப்பகுதிக்குள் இழுத்து செல்லப்பட்டது. நேற்று அதிகாலை சித்தையன்கோட்டை ரோட்டில் சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்துள்ளனர்.மேலும் சில நாட்களாக விவசாயிகளின் தோட்ட காவல் நாய்களும் மாயமாகி வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் தகவலையடுத்து வனத்துறையினர் இரவில் பட்டாசு வெடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.