நீர்த்துப்போன நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்
திண்டுக்கல்: நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் தற்போது நடைமுறையில் இல்லாமல் மறைந்து போய்விட்டது. பொதுமக்களின் நலன் ,ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் 2023 நவம்பரில் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் துாரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டது. அந்த ரோடுகள் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வண்ணம் முழுமையாக செப்பனிடப்பட்டு சாய்வு இருக்கைகள் , குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இத்திட்டத்திற்கென ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள்,பொது சுகாதார துறையினர் செய்தனர். மேலும் சுகாதார துறையின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்களும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தற்போது முழுமையாக பயன்பாட்டில் இல்லை. இதனை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவரும் கவனிப்பதுமில்லை கண்காணிப்பதும் இல்லை. இதனால் இது கைவிடப்பட்ட திட்டமாகவே இருக்கிறது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கி.மீ., பாதையை நடைபயிற்சிக்காக பொதுமக்களும் எவரும் பயன்படுத்துவதில்லை. நடைபயணத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட சாய்வு இருக்கைகள் கேட்பாரற்று கிடக்கிறது. பொதுமக்கள் கூறியதாவது: திட்டம் ஆரம்பித்த புதிதில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 கி.மீ., ரோடு சுத்தம் செய்யப்பட்டது. குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. பெரிய,கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் நாட்கள் செல்ல அந்த ரோடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. வாகன போக்குவரத்து அதிகரித்ததால் பூங்கா போன்ற இடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள சென்று விட்டோம் என்றனர்.