உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பராமரிப்பின்றி, கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்

பராமரிப்பின்றி, கேட்பாரற்று கிடக்கும் லிங்கம்மாள் குளம்

திண்டுக்கல் : பாரமரிப்பின்றியும், கழிவுநீர் தேங்குமிடமாகவும், மதுபிரியர்களின் கூடாரமாக மாறும் சூழல் என பல்வேறு பிரச்னைகளோடு காட்சியளிக்கிறது திண்டுக்கல் லிங்கம்மாள் குளம்.திண்டுக்கல் -- தாடிகொம்பு மெயின் ரோடு, ஆர்.எம்.காலனி, 1,2 வார்டுகள் என 7 வார்டுகள், பல்வேறு பகுதிகளுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் ஆதாரமாக இருந்தது லிங்கம்மாள் குளம். நகரின் பிரதான ரோட்டை ரொட்டி பல குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளஇந்த குளம் 10 ஆண்டுகளாக மாசுபட்டு வருகிறது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும் இந்த குளம் தற்போது பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கிறது. குளத்தின் 4 மூலைகளிலும் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கழிவுகள் குளத்திற்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் குளம் கழிவுநீருடன் மாசுபட்டு காட்சியளிக்கிறது. இதோடு செடிகளும் ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ளன. குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள சமீபத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இது என்னவோ மதுப்பிரியர்களுக்கு வசதியாகி விட்டது. இரவு நேரங்களில் ஒரு மூலையில் மது கூடாரமாக மாறுகிறது. 2 ஏக்கர் வரை உள்ள இந்தக்குளம் ஆக்கிரமிப்பால் பாதியாக உள்ளது. பாதியை காணவில்லை. மழை பெய்தால் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறுகிறது. அருகிலே தனியார் பள்ளி வேறு உள்ளது. சுற்றிலும் கம்பிவேலி உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பயன்பாட்டிற்கு வர வேண்டும்

தேவராஜ், செயலாளர், சோபா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகராட்சியின் 7 வார்டுகளுக்கு இந்த குளம் தான் குடிநீர் ஆதாரமாக இருந்தது. தற்போது மாசடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் தேங்குதல் நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள், தனியார் பள்ளி உள்ளன. இக்குளத்தை பாரமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துார்வாரி, நடைபாதை இருக்கைகள் போன்றவை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கழிவுநீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

துார்வாரினாலே போதும்

ராதாகிருஷ்ணன், தலைவர், பண்ணை குடியிருப்போர் நலச்சங்கம் : இந்த குளத்தைச் சுற்றி அதிகமான குடியிருப்புகள் வந்து விட்டன. இன்னும் அதிகரிக்கவே செய்யும். குளத்தை துார்வாரி, குளத்தை சுற்றி கம்பிகள் போட்டு கழிவுகள், குப்பை கொட்டப்படுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். நடைபயிற்சிக்காக பேவர் பிளாக் கற்கள் உள்ளன. சுற்றிலும் விளக்குள் அமைத்தால் இரவு நேரங்களில் குழந்தைகள், பெரியவர்களின் பொழுதுபோக்கிடமாக மாறும். குளமும் மாசடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை