உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லை-
திண்டுக்கல்: ''உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் குறைவாக உள்ளதாக '' எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், இலக்கிய களம் சார்பில் திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது: தமிழ் பண்டிதர்கள் பற்றிய வரலாறுகளை தந்தவர் உ.வே.சாமிநாத ஐயர். உள்ளூர் சார்ந்து பதிவு செய்யகூடிய புத்தகங்கள் மிக முக்கியமானது. உள்ளூர் படைப்பாளர்களுக்கு நாம் எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உள்ளூரின் சிறப்புகளுக்கு, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போதுதான் திறமைகள் வெளிப்படும். தமிழர்களை பொருத்தவரை உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது குறைவாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் ராஜம் ஐயர், கமலாம்பாள் சரித்திரம் எனும் நுாலை எழுதி உள்ளார். ஜல்லிக்கட்டு பற்றி முதல்முதலில் பதிவு செய்திருப்பது அவர் தான். திண்டுக்கல் மாவட்டத்தின் கலை, பண்பாடு, வரலாறு பற்றிய தெரிய வத்தலகுண்டை சேர்ந்த சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமய்யா ஆகியோர் நுால்களை படிக்கவேண்டும் என்றார். சென்னை மாநகராட்சி சுகாதார இணை இயக்குனர் ஜெயசீலன் பேசியதாவது :அலைபேசிக்கு ஓய்வு கொடுக்கும் சிறந்த வாய்ப்பை புத்தக திருவிழாக்கள், சிந்தனை களங்கள் வழங்குகின்றன. நாம் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கசடற கற்க வேண்டும். தற்போது எல்லோருக்குமான அடையாளமாக திருக்குறள் மாறியிருக்கிறது. திருக்குறளில் எல்லா பிரச்னைக்கும் தீர்வு உள்ளது. மனிதனுக்கு தொடர்ச்சியான வாசிப்பு அவசியம். மனிதனின் தொடர்ச்சியான தவறுகளை அடுத்த தலைமுறை செய்யக்கூடாது என்பதைத்தான் புத்தகம் அனுபவமாக பேசுகிறது. அடுத்தவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுகொள்வதற்கு எளிய வழி புத்தகம் என்றார். கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். பயிற்சி கலெக்டர் வினோதினி, இலக்கியக்களம் தலைவர் மனோகரன், துணைத்தலைவர், சந்திரா, ராமமூர்த்தி கலந்து கொண்டனர்.