உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொலைதுார பஸ்கள் நிறுத்தம்; வேதனையில் வேடசந்துார் மக்கள்

தொலைதுார பஸ்கள் நிறுத்தம்; வேதனையில் வேடசந்துார் மக்கள்

வேடசந்துார் : வேடசந்துாரிலிருந்து சென்னை, திருச்சி, நாகூர், கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு செல்லும் தொலைதுார அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் திண்டுக்கல் , கரூர் சென்று சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்வதால் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வேடசந்துார் தாலுகா பகுதி வறட்சி பாதித்த பகுதியாகும். இப்பகுதியை 30 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு மானிய உதவியுடன் ஏராளமான நுாற்பாலைகள் அமைந்தன. இதனால் இப்பகுதி மக்கள் , இளைஞர்கள், இளம் பெண்கள் போதிய வேலை வாய்ப்புகளை பெற்றனர். தற்போது பெரும்பாலான இளைஞர்கள், இளம் பெண்கள், பள்ளி கல்லுாரிகளில் படித்து அரசு தனியார் வேலை வாய்ப்புகளில் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். வெளியூர்களிலும் படித்து வருகின்றனர். படித்த இளைஞர்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் பணிபுரிகின்றனர். இதனால் வேடசந்துார் தாலுகா பகுதி சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்த பகுதியாக மாறி வருகிறது.இந்நிலையில்தான் இப்பகுதி மக்களின் நலன் கருதி வேடசந்துாரிலிருந்து இரவு 9:00 மணிக்கு சென்னை நோக்கி அரசு பஸ் சென்றது. இதேபோல் சென்னையில் இரவு 9:30க்கு புறப்படும் மற்றொரு பஸ் வேடசந்தூர் நோக்கி காலை 6:00 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனால் சென்னை செல்வோர் பயன் பெற்றனர்.தற்போது இந்த இரண்டு பஸ்களும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் சென்னை செல்லும் மக்கள், தனியார் பஸ்கலில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. சிலர் திண்டுக்கல் , கரூர் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டியுள்ளது.திருச்சி, பாளையம், எரியோடு வழியாக பழநி சென்று மீண்டும் திரும்பி வந்த அரசு பஸ்சும் வருவதில்லை. முசிறியிலிருந்து எரியோடு வழியாக பழநி சென்ற அரசு பஸ்சும் வருவதில்லை. நாகூருக்கு விடப்பட்ட அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. தொலைதுார பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதோடு இங்கிருந்து திருப்பூருக்கும் இரண்டு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

20 கி.மீ., பயணம்

கே.பொம்முசாமி, வட்டார குரு தொழில்கள் நலச் சங்கத் தலைவர், வேடசந்துார்: கோவை சென்ற அரசு பஸ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. கலெக்டரிடம் மனு கொடுக்க தற்போது காலை நேரங்களில் மட்டும் ஒரு முறை இயக்கப்படுகிறது. மாலை நேரங்களில் வரவேண்டிய டிரிப் கட் செய்து வேறு இடங்களுக்கு இயங்குகின்றனர். வேடசந்துாரிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களும் வந்து செல்வதில் சிரமம் அடைகின்றனர். 20 கிலோமீட்டர் துாரம் உள்ள திண்டுக்கல் சென்று சென்னை செல்ல வேண்டியது உள்ளது என்றார்.

நடவடிக்கை இல்லை

ஆர்.சந்திரசேகர், தலைவர், நுகர்வோர் பாதுகாப்புச் நலச்சங்கம் : மதுரையிலிருந்து சேலம், ஈரோடு செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் வேடசந்தூர் ஆத்து மேட்டிற்கு வருவதில்லை. நெடுஞ்சாலையில் நேராக சென்று விடுகிறது. இரவு நேரங்களில் திண்டுக்கல் , கரூரில் இருந்து வேடசந்துார் வருவதென்றால் இயலாத காரியமாக உள்ளது. வேடசந்துார் வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் அவுட்டரில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லாமல் நகர் பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். முழுமையான நடவடிக்கை இல்லை.

மீண்டும் இயக்குங்க

கே.நேரு மாணிக்கம், செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கம்: வடமதுரை கோவை அரசு பஸ்சை இரு முறை வந்து செல்லும் வகையில் முறைப்படி இயக்க வேண்டும். முசிறி, தரகம்பட்டி வழியாக பழநி சென்ற அரசு பஸ்சும், நாகூர் சென்ற அரசு பஸ்சையும் இப்பகுதி மக்களின் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும். சென்னை செல்லும் அரசு பஸ், பள்ளி கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை