அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது
திண்டுக்கல்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மக்கள் நல பணியாளரிடம் 6.85 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடுகின்றனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஊத்துக்குழியை சேர்ந்த மக்கள் நல பணியாளர் ஆதிமுத்து, 53. மகன் சிவராஜுக்கு அரசு வேலைக்காக ஆதிமுத்து முயற்சித்தார். கடந்த, 2023ல் அவருடன் வேலை பார்த்த பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தமாள் மூலமாக, திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை சேர்ந்த மாமத்தி, 54, புதுக்கோட்டை மாவட்டம், கதவம்பட்டியை சேர்ந்த கிருபாகரன் அறிமுகமாயினர். அவர்கள், 'வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 7 லட்சம் ரூபாய் தந்தால், அந்த பணியிடத்தை வாங்கித் தருகிறோம்' என கூறினர். அதை நம்பிய ஆதிமுத்து, பல தவணைகளாக, 6.85 லட்சம் ரூபாயை மாமத்தி, கிருபாகரன் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார். ஆனால், அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., பிரதீப்பிடம், ஆதிமுத்து புகார் அளித்தார். அதன்படி, குற்றப்பிரிவு போலீசார், மாமத்தியை கைது செய்தனர். தலைமறைவான கிருபாகரனை தேடி வருகின்றனர்.