உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடை வாடகை கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கடை வாடகை கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே கடை வாடகை கேட்ட உரிமையாளரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர். பாலகிருஷ்ணாபுரம் எக்ஸ்போ சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் 63. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு திண்டுக்கல் - -திருச்சி ரோட்டில் சொந்தமான கடை உள்ளது. இதனை உறவினரான நாகபாண்டிக்கு 37, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு கொடுத்துள்ளார். அங்கு இறைச்சிக்கடை நடத்திய அவர் துவக்கம் முதலே வாடகை கொடுக்கவில்லை. இதனால் கடையை காலி செய்யுமாறு பாண்டியராஜன் கூறியதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக இரு முறை திண்டுக்கல் தாலுகா போலீசில் பாண்டியராஜன் புகாரும் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்து வந்த நாகபாண்டி, பாண்டியராஜன் வீட்டின் பின்புறமாக வந்து சமையலறையில் நாட்டு வெடிகுண்டும் பின்னர் வீட்டின் முன்பக்கம் உள்ள கேட் பகுதியில் பெட்ரோல் குண்டும் வீசினார். இதன் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வர நாகபாண்டி தப்பினார். பாண்டியராஜன் குடும்பத்தினர் சமையலறையில் எரிந்த தீயை அணைத்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நாகபாண்டியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ