காலை சிற்றுண்டி திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயன் அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரம்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர் ''என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் ஒன்றியம் புலியூர்நத்தம், புளியமரத்துகோட்டை, கேதையுறும்பு ஊராட்சிகளில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று , சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. இத்திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபாகரன், பி,டி.ஓ.,க்கள் பிரபுபாண்டியன், காமராஜ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே பாலு கலந்து கொண்டனர்.