உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீட் போலி சான்று விவகாரம் குமரியிலும் பதிவானது வழக்கு

நீட் போலி சான்று விவகாரம் குமரியிலும் பதிவானது வழக்கு

திண்டுக்கல்:போலி சான்றிதழுடன் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவி , பெற்றோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரிக்கு முன்பே கன்னியாகுமரி மருத்துவக் கல்லுாரியில் சேர முயற்சித்து வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதன் 55. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜய முருகேஸ்வரி 47. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி 19. இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் 228 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நடந்த முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் சீட் கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த காருண்யா , அவரது பெற்றோர் நீட் தேர்வில் 456 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழை உருவாக்கினர். அந்த சான்றிதழுடன் , திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கான அட்மிஷன் பெற்றுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் நேரத்தில் மாணவர் சேர்க்கை விபரங்கள் குறித்து சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் காருண்யா ஸ்ரீவர்ஷினி அளித்த சான்றிதழ் உள்ளிட்டவை போலியானது என கண்டறியப்பட்டது.இதையடுத்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் காருண்யா ஸ்ரீவர்ஷினி, தந்தை சொக்கநாதன், தாயார் விஜய முருகேஸ்வரியை கைது செய்தனர். இதுபோல் தமிழகத்தில் வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா என போலீசார் விசாரித்தபோது போலி சான்றிதழ் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கு கருண்யா முயற்சி மேற்கொண்டுள்ளார். மதிப்பெண்களில் மாறுபாடு இருப்பதை கண்டறிந்த மருத்துவ கல்லுாரி நிர்வாகம் புகாரில் ஆசாரிப்பள்ளம் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போலி சான்றிதழ்களை உருவாக்கிக் கொடுத்தவர்கள் குறித்த விவரங்களை கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ