திண்டுக்கல் பூ மார்க்கெட் கடைகளுக்கு நோட்டீஸ்
திண்டுக்கல் திண்டுக்கல் பூ மார்கெட்டை அப்புறப்படுத்தி புதிய கடைகள் கட்டும் பொருட்டு கடைகளை காலிசெய்யக் கோரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் இச்சந்தை கடைகளையும், தரைத் தளத்திலுள்ள வணிக நிறுவனங்களையும் அப்புறப்படுத்திவிட்டு ரூ.5.50 கோடி செலவில் புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி 22,500 சதுர அடி பரப்பில், 11க்கு 11 என்ற அளவில் 54 கடைகளும், 6 க்கு 6 என்ற அளவில் 50 சில்லரை விலை கடைகளும் கட்டப்பட உள்ளன. இந்நிலையில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு வசதியாக தற்போதுள்ள கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் பதிவு தபால் மூலம் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்திற்குள் கடையை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாதபட்சத்தில் மாநகராட்சி சார்பில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.