ஆத்துார் தொகுதியில் அரசு பஸ்கள் இயக்கத்தில் அலட்சியம்; வருவாயை தனியாருக்கு தாரை வார்க்கும் அதிகாரிகள்
கன்னிவாடி: ஆத்துார் தொகுதிக்கான அரசு டவுன் பஸ்களின் சேவையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மாணவர்கள், மகளிர், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆத்துார் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம், ஆத்துார் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் 2, 3 கிளைகள் ஆகிய டெப்போக்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விவசாய தொழிலை அடிப்படையாக கொண்ட இப்பகுதிகளில் அரசு டவுன் பஸ் சேவையே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. கூலித் தொழிலாளர்கள் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலகுண்டு, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ் சேவையை நம்பி உள்ளனர். நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் இவையே போக்குவரத்து வசதியாக அமைந்துள்ளன.பல கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் வசதி போதியளவு இல்லை. ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களில் விபத்து அபாயத்துடன் பயணிக்கும் நிலைதான் உள்ளது. அதிகரிக்கும் அதிருப்தி இந்நிலையில் சில வழித்தடங்களில் புதிய டவுன் பஸ்கள் அறிமுகமானபோதும் விசேஷ நாட்களில் வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களாக அனுப்புகின்றனர். மாற்று பஸ் இயக்க முன்வரவில்லை. பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில் இப்பிரச்னை தாராளமாக தொடர்கிறது. தனியார் பஸ்களுக்கு ஏதுவாக சில அரசு பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படுவது தொடர்கிறது. ரோடு, பாலங்கள் சேதம், சீரமைப்பு பணிகள், தாழ்வான மரக்கிளை போன்ற காரணங்களைக் கூறுகின்றனர். அதிகாரிகள் கண்காணிக்காததால் ஊழியர்கள் தன்னிச்சையாக கன்னிவாடி, செம்பட்டி, சின்னாளபட்டி உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களை புறக்கணிக்கின்றனர். செம்பட்டி, சின்னாளபட்டி, மைலாப்பூரில் அரசு பஸ் நேரங்களில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.வருவாய் இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் அலட்சியப்போக்கால் அதிருப்தி அதிகரித்து வருகிறது. அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தில் குளறுபடிகளை நீக்கி தேவைக்கேற்ப கூடுதல் சேவைக்கான நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.