ஓணத்தால் விலை உயர்ந்த முருங்கைக்காய் கிலோ ரூ.46 க்கு விற்பனை
ஒட்டன்சத்திரம்: ஓணம் பண்டிகை காரணமாக ஒட்டன்சத்திரத்தில் முருங்கைக்காய் விலை ஒரே வாரத்தில் இரு மடங்காகி கிலோ ரூ.46 க்கு விற்பனை ஆனது. திண்டுக்கல் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள்ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றில் 70 சதவீதத்திற்கும் அதிகமான காய்கறிகளை கேரள வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கேரளாவில் செப். 5 ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொத்தவரை, வெண்டை ,பூசணி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளை அம்மாநில வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வர். இதன் காரணமாக பண்டிகை தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே காய்களின் விலை அதிகரிக்கும். நேற்று கேரள வியாபாரிகள் முருங்கைக்காயை அதிகமாக வாங்கியதன் காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.22க்கு விற்ற செடி முருங்கைக்காய் நேற்று ரூ.46 க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் வெண்டை, கொத்தவரை, பூசணி உள்ளிட்ட காய்களின் விலையும் அதிகரிக்கும். கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், 'ஓணம் பண்டிகை காரணமாக கேரள வியாபாரிகள் முருங்கைக்காயை அதிகமாக கொள்முதல் செய்ததால் விலை ஏற்றம் அடைந்துள்ளது' என்றார்.