பழநி கோயில் வின்ச் கட்டணத்தை உயர்த்த திட்டம்: பக்தர்கள் எதிர்ப்பு
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு செல்ல பயன்படும் வின்ச் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் நவ., 5 வரை கருத்து கேட்கிறது. கட்டணம் உயர்த்த பக்தர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழநி முருகன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, ரோப்கார், வின்ச் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மலைக்கு செல்ல தற்போது மூன்று வின்ச்கள் உள்ளன. மலைக்கு செல்ல ரூ.10, ரூ.50, ரூ.60, கீழே வர ரூ.10, ரூ.25, ரூ.30 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ரோப் காரில் செல்ல ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் வின்ச்சிற்கும் ரூ. 50 ஒரே கட்டணமாக வசூலிக்க கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை, ஆட்சேபனை இருப்பின் இணை கமிஷனர், செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழநி என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ நவ. 5 க்குள் அனுப்ப கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி பக்தர் பேரவை நிறுவனர் செந்தில்: பழநி கோயிலை திருப்பதியைப் போல் மாற்ற முயலும் அரசு, திருப்பதியில் உள்ளது போல் அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும். இங்கு எல்லாவற்றிற்கும் பணம் வசூலிக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் வின்ச் சேவையை பயன்படுத்துகின்றனர். சில நாட்களுக்கு முன் ரூ.60 டிக்கெட்டில் அதிநவீன வின்ச் இயக்கப்பட்டது. தற்போது அதில் வசதிகள் அனைத்தும் மாயமாகிவிட்டன. 72 பேர் பயணிக்க கூடிய வின்சில் 30 பேர் மட்டுமே பயணிக்கின்றனர். கட்டண மாற்றம் பெயரில் வின்ச்க்கு ரூ. 50 கட்டணம் நிர்ணயித்தால் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் வந்து செல்ல 500 ரூபாய் செலவு ஏற்படும். இது தவிர அலைபேசி வைக்க, பஞ்சாமிர்தம் வாங்க என செலவழிக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் எந்த கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்ய வேண்டும். ரூ.50 வின்ச் கட்டணத்தை ரூ. 20 ஆக மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.