பழனியில் இன்று திருக்கல்யாணம் நாளை தைப்பூச தேரோட்டம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடக்கிறது.இக்கோவிலில் பிப்., 5ல் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று 6ம் நாள் திருவிழாவில் காலை 9:15 மணிக்கு மேல் தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் இரவு 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் நடக்க உள்ளது. இரவு 9:00 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது.நாளை அதிகாலையில் தோளுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடக்கும். காலை 11:15 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருள்வார். மாலை 4:45 மணிக்கு தைப்பூச தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கிறது. பிப்., 14 மாலை தெப்பத் தேர் திருவிழா நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா முடியும்.