உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால் மகளிர் உரிமைத்தொகை நத்தத்தில் பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால் மகளிர் உரிமைத்தொகை நத்தத்தில் பழனிசாமி பேச்சு

நத்தம்: ''எங்களின் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க., அரசு வழங்கியது,'' -என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது : 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் 525 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இதில் 10 சதவீத வாக்குறுதிகளை தான் நிறைவேற்றி உள்ளனர். நிறுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடனே தொடரும். மகளிருக்கு வழங்கப்படும் உரிமை தொகை அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால் தான் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் சாதாரண கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா கிளினிக் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அவை செயல்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரம் கிளினிக் மீண்டும் திறக்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நுாறுநாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என சொன்னார்கள். செய்தார்களா? தற்போது 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்கு சொல்லப்பட்ட பொய்யான வாக்குறுதி அது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ரத்து செய்தார்களா. தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான கடைகள் தி.மு.க., கட்சிகாரர்களே நடத்தி வருகின்றனர் என்றார். எதுவுமே செய்யவில்லை திண்டுக்கல் மணி கூண்டு அருகே பழனிசாமி பேசியதாவது : அ.தி.மு.க., ஆட்சியில் தான் அதிக திட்டங்களை நிறைவேற்றினோம். 51 மாத கால ஆட்சியில் தி.மு.க., வினர் எதுவுமே செய்யவில்லை. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது. சிறுமி தொடங்கி பாட்டி வரை பாதுகாப்பில்லை. சென்னை நெற்குன்றத்தில் 4 சவரன் தங்க நகை திருடுபோனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தி.மு.க., வை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர் திருடியது தெரிய வந்துள்ளது. இந்த ஆட்சி எப்படிப்பட்ட திருட்டு ஆட்சி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ. 4 கோடி 66 லட்சம் மோசடி நடந்துள்ளது. தி.மு.க.,வினரே வழக்கு போட அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க., கட்சியினர் எங்கெல்லாம் மேயராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊழல் நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குகின்ற விதத்தில் ஆண்டுக்கு 5400 கோடி மேலிடத்திற்கு செல்கிறது. நான்கு ஆண்டில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளனர். கடன் வாங்கியாவது ஏதாவது திட்டம் கொண்டு வந்துள்ளார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல்மாநிலம் தமிழகம் தான். அ.தி.மு.க., பா.ஜ., உடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது என்ற தவறான செய்தியை தி.மு.க., திட்டமிட்டு பரப்பி வருகிறது. அதை சிறுபான்மையினர் நம்பாமல் இருக்க வேண்டும்.சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த அரசு அ.தி.மு.க., அரசுதான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை