ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு
பழநி:பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்திற்கு தனி நபர் பூட்டு போட்டு செல்ல போலீசார் உதவியுடன் அலுவலகம் திறக்கப்பட்டது.பழநி ஊராட்சி ஒன்றியத்தில் கோதைமங்கலம் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 9:15 மணிக்கு பணியாளர்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த போது அலுவலகத்தில் பூட்டப்பட்டு இருந்த பூட்டிற்கு மேல் மற்றொரு பூட்டு போடப்பட்டிருந்தது. பழநி தாலுகா போலீசார்ஊராட்சி அலுவலக கதவில் ஒட்டப்பட்டிருந்த பேப்பர்களை ஆய்வு செய்தனர். அதில் கோதைமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பெரியசாமி என்ற பெயர் இருந்தது.ஊராட்சி அலுவலர்கள் கூறியதாவது: பெரும்பாறையை சேர்ந்த பெரியசாமி நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்து ஊராட்சி அலுவலகம் உள்ள இடம் அவருக்கு சொந்தமானது என கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும் சில மாதங்களுக்கு முன் அவர் வீட்டுக்கு வீட்டு வரி ரசீது வழங்க கோரினார். அவர் வீடு கட்டி உள்ள இடம் அவருக்கு சொந்தமானது அல்ல என கூறி வீட்டு வரி ரசீது வழங்க மறுத்தோம்.இதை மனதில் கொண்டு அலுவலகத்திற்கு பூட்டு போட்டுள்ளார் என்றனர்.இதை தொடர்ந்து ஊராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.