மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு
சின்னாளபட்டி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி, ஒய்.எம்.ஆர்., பட்டி உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சின்னாளபட்டி : சதுர்முக முருகன் கோயிலில் மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், அபிஷேக, ஆராதனை நடந்தது.வடமதுரை : மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தென்னம்பட்டி ஆண்டிபட்டி பேசும் பாலமுருகன், பாலவிநாயகர், பாலமயில் கோயில், தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் கோயில் உள்பட முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது. பன்னீர், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.தாண்டிக்குடி : கொடைக்கானல் தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கொடுமுடியிலிருந்து தீர்த்தக்காவடி, பால், பன்னீர், இளநீர் காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பறவை காவடி எடுத்தல், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. மலைக் கோயிலில் மாலை தேரோட்டம் நடந்தது. கலை அரங்கத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவடிகள் எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் குறிஞ்சி ஆண்டவர் கோயிலை வந்தடைந்தனர். அன்னதானம் நடந்தது. பண்ணைக்காடு சுப்ரமணிய சுவாமி கோயிலிலும் பங்குனி உத்திர விழா நடந்தது.