ரயிலில் பயணி தவற விட்ட பணப்பை ஒப்படைப்பு
திண்டுக்கல்:நாகர்கோவில் பள்ளிவினை ரயில்வே நகரை சேர்ந்தவர் அய்யப்பன் 25. சென்னை தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சென்ற அந்தியோதயா ரயிலில் பயணித்தார். இரவு 7:45 மணிக்கு மதுரை வந்த போது உணவு வாங்குவதற்காக இறங்கினார். திரும்புவதற்குள் ரயில் சென்றுவிட்டது.பதட்டமடைந்த அய்யப்பன் மதுரை ரயில்வே போலீசாரிடம் ரயிலை விட்டதோடு தான் கொண்டு வந்த பையில் ரூ.1 லட்சம் இருப்பதை கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ரயில்வே எஸ்.ஐ., பாஸ்கரன், போலீசார், இரவு 9 :00 மணிக்கு திண்டுக்கல் வந்த ரயிலில் சோதனையிட்டனர்.ஒரு இருக்கையில் அய்யப்பன் கூறிய அடையாளங்களுடன் பையில் ரூ.1 லட்சம் ,துணிகள் இருப்பதை உறுதி செய்தனர். இரவு 10:30 மணிக்கு திண்டுக்கல் வந்த அவரிடம் பணப்பையை ஒப்படைத்தனர்.