மேலும் செய்திகள்
நடப்பதற்கே பயனற்றுபோன கா.பண்ணைப்பட்டி ரோடு
05-Oct-2024
குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சி பேர்நாயக்கன்பட்டி பகுதியில் இருந்து கோம்பை செல்லும் நேர்வழியில் சிற்றோடை குறுக்கிடும் நிலையில் பாலம் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் 6 கி.மீ., சுற்றி செல்கின்றனர்.திண்டுக்கல் கரூர் ரோட்டில் கோவிலுார் மின் அலுவலகத்தில் இருந்து சென்றால் 4 கி.மீ., தொலைவில் உள்ளது ஆர்.கோம்பை ஊராட்சி. இயற்கை எழில் சூழும் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள இந்த ஊராட்சி பகுதி பசுமை போர்த்திய பூமியாகவே காட்சியளிக்கிறது. இங்கு விவசாயமும் செழித்துள்ளது. குறிப்பாக தக்காளி, கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. தினமும் மாலை நேரங்களில் இப்பகுதிகளில் இருந்து மினி வேன்களில் காய்கறிகள் ஏற்றி செல்வது தொடர்கதையாக உள்ளது. இவ்வளவு இயற்கை எழில் சூழும் இந்த ஊராட்சியில் தான் வடக்குப் பகுதியில் உள்ள பேர்நாயக்கன்பட்டி,பே.சக்கிலியம்பட்டி, கண்ணாமுத்தநாயக்கனுார், எம். களத்துார் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் ஆர்.கோம்பையில் உள்ள ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு செல்ல வேண்டுமாயின் எட்டி குளத்திற்கு செல்லும் சிற்றோடையை கடந்து தான் செல்ல வேண்டும். கிழக்குத் தொடர்ச்சி மலை ராமக்கல்அடிவார பகுதியில் இருந்து புறப்படும் இந்த சிற்றோடையில் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் இந்த ஓடையை கடக்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் தொடர்ந்து ஊற்று நீர் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடை வேறு மிக ஆழமாக உள்ளதால் முதியவர்கள் நடந்து செல்வதிலும் டூவீலரில் செல்வதிலும் சிரமம் உள்ளது. இது மட்டுமின்றி பள்ளி கல்லுாரி மாணவர்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதிலும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி சிற்றோடையில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிராம மக்கள் அவதி
எ.அப்பாவு, விவசாயி, எம்.களத்துார்: மெத்தைப்பட்டி மலை தொடர்ச்சியில் உருவாகும் இந்த சிற்றோடை எம்.களத்துஆர், ஆணைகவுண்டன்பட்டி வழியாக எட்டிக்குளம் செல்கிறது. மழை காலங்களில் இந்த சிற்றோடையில் தொடர்ந்து தண்ணீர் செல்வதால் பேர் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள 4 கிராம மக்கள் ஆர்.கோம்பை செல்ல வேண்டுமாயின் 6 கி.மீ., சுற்றித்தான் செல்கின்றனர். இங்கு பாலம் கட்டினால் இப்பகுதி மக்களுக்கான நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வரும். பள்ளி கல்லுாரி வாகனங்கள், நுாற்பாலை வாகனங்கள், டூவீலர் போக்குவரத்து என அனைத்தும் சிரமமின்றி செல்லும். சிரமம் இன்றி செல்வர்
எம்.முருகன், முன்னாள் வார்டு உறுப்பினர், ஆனைகவுண்டன்பட்டி: சிற்றோடையில் பாலம் வசதி கோரி 10, 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். சிறு பாலத்தை கட்டி கொடுத்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவர். ஆர்.கோம்பை ஊராட்சி அலுவலகம், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளிட்ட வேலைகளுக்கு செல்வோர் சுலபமாக சென்று வருவர். அது மட்டுமன்றி கோம்பை பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம் இன்றி செல்வர். எளிதில் செல்ல வசதி
எஸ். மலர்வண்ணன், ஊராட்சி தலைவர், ஆர்.கோம்பை: எம்.களத்துார் அருகே சிறு பாலம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் பாலத்தை கட்டி கொடுத்தால் பேர்நாயக்கன்பட்டி பகுதியில் இருந்து ஆர்.கோம்பை ஊராட்சிக்கு மக்கள் எளிதில் சென்று வருவர். இதேபோல் ஆர். கோம்பை பகுதியில் உள்ள மெத்தைபட்டி, கரையானுார், தாதனுார் உள்ளிட்ட சுற்று பகுதி மக்களும் இந்தபாலத்தை கடந்து புளியம்பட்டி வழியாக குஜிலியம்பாறைக்கு எளிதில் சென்று வரலாம். ராமகிரி நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு சென்றுவர 3 கி.மீ., துாரமே என்பதால் எளிதில் சென்று வருவர்.
05-Oct-2024