விடுமுறை முடிந்து வெளியூருக்கு படையெடுத்த மக்கள்
திண்டுக்கல்: தீபாவளி விடுமுறை முடிந்து திண்டுக்கல்லிலிருந்து வெளியூருக்கு செல்லும் ஏராளமான பயணிகள் செல்ல தொடங்கியதால் ரயில்வே ஸ்டேஷன்,பஸ் ஸ்டாண்ட்களில் கூட்டம் அலைமோதியது.தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏராளமானோர் குவிந்தனர். தற்போது தீபாவளி,சனி.ஞாயிறு விடுமுறைகள் முடிந்து மீண்டும் பணிக்காக பயணிகள் வெளியூருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ஏற்கனவே ரயில் முழுவதும் பயணிகளால் நிரம்பிய நிலையில் திண்டுக்கல்லில் நுாற்றுக்கு மேலான பயணிகள் ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். ஏராளமான பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இடம் கிடைக்காததால் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட், பின்புறம் உள்ள ஆம்னி பஸ்கள் நிற்குமிடம்,புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பைபாஸ் ரோடு சந்திப்புகளிலும் தங்களின் உடமைகளோடு ஏராளமான பயணிகள் காத்திருந்து பஸ்சில் பயணித்தனர். இதனால் பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் இருந்தது.