இயந்திர பயன்பாட்டிற்கு அனுமதி கட்டாயம்
'கொடை' ஆர்.டி.ஒ., தகவல்கொடைக்கானல்: ''கொடைக்கானல் மலைப்பகுதியில் இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்'' என கொடைக்கானல் ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத்தள பாதுகாப்பு விதியின் படி அப்போதைய கலெக்டர் வள்ளலார் , போர்வெல், மண் அள்ளும் இயந்திரம், கம்ப்ரசர், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்தார். தற்போதும் இது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் வருவாய், வனத்துறை உள்ளிட்ட பிற துறை ஆசியுடன் தடை இயந்திரங்கள் பயன்பாடு தொடர்ந்தது. அவ்வப்போது அதிகாரிகள் கடுமை காட்டுவது போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு ஜூன் 30ம் தேதிக்குள் இயந்திரங்கள் மலைப்பகுதியை விட்டு தரையிரங்க வேண்டும் மீறும் பட்சத்தில் ஜூலை 1ம் தேதி தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்து அபராதம்,குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதைதொடர்ந்து தற்போது ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு கூறுகையில்,'' இதுவரை தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் 32 தரையிறக்கப்பட்டுள்ளது. 30 இயந்திரங்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய பணி, கட்டமைப்பு உள்ளிட்ட தேவைக்கு திண்டுக்கல் கலெக்டரிடம் அனுமதி பெற்று பயனடையலாம். இத்தகைய இயந்திரங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் ''என்றார்.