ஆக்கிரமிப்பால் குறுகும் தெருக்களில் மக்கள் பரிதவிப்பு; அவசர நேரத்தில் திக்குமுக்காடும் அவலம்
பொதுவாக ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் பல இடங்களில் ரோடு விளிம்பு வரையிலும், சில இடங்களில் தாண்டி தார் ரோட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் நிழற்கூரைகளை அமைத்திருப்பதை பார்க்கலாம். இதுவிஷயத்தில் அரசு துறை அதிகாரிகளின் கண்காணிப்பும், கண்டிப்பான நடவடிக்கையும் இல்லாததால் இதுபோன்ற நிலை நீடிக்கிறது. பல இடங்களில் சிக்கல் அதிகமான பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கும். பின்னர் சில மாதங்களில் படிப்படியாக பழைய ஆக்கிரமிப்பு நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் வந்துவிடுகின்றனர். அடுத்து பல ஆண்டுகள் கழித்து நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வரை, இந்த ஆக்கிரமிப்பு நிலையில் மாற்றம் இருக்காது. இதுஒருபுறமிருக்க, தற்போது குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் வீடுகள் கட்டும் பலரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறிது உயரமாகவே கட்டுகின்றனர். தங்களது இடத்திற்குள் வீடுகளை அமைக்கும் இவர்கள் திண்ணை, டூவீலர், கார் வாகனங்களை ஏற்ற, இறக்க சாய்வுத்தளம் போன்றவற்றை பொது பாதையை ஆக்கிரமித்து அமைக்கின்றனர். இதனால் தெருக்களின் இருக்கும் பொதுப்பாதையின் அகலம் குறைந்து விடுகிறது. இதனால் பல ஊர்களில் ஏற்கனவே அகலம் குறைவாக இருக்கும் தெருக்களில் அவசரத்திற்கு கார், ஆட்டோ, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் பரிதவிக்கும் அவலம் ஏற்படுகிறது. தெருக்களுக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிதாக ஏற்படாமல் இருப்பதையும் கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-