ஏ.வெள்ளோடு கிராமத்தில் போலீஸ் குவிப்பு
சின்னாளபட்டி: ஏ.வெள்ளோடு கிராமத்தில், புனித யாகப்பர், புனித தெரசாள் தேவாலய திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடு தொடர்பாக வரும் செவ்வாய்க்கிழமை கிராம கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கோயில் சப்பரம் உள்ள கதவின் பூட்டை உடைத்து, தேரினை வெளியே எடுப்பதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர், கூட்டம் நடத்துவதற்கு முன்னதாகவே தேரினை வெளியே எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் போலீஸ் டி.எஸ்.பி., தெய்வம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியே இழுத்து வரப்பட்ட தேரினை, மீண்டும் வளாகத்திற்குள் வைத்து புதிய பூட்டு மூலம் பூட்டி சாவி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. 'இருதரப்பினர் இடையே சமரச பேச்சு வார்த்தைக்கு பின், திருவிழா நடவடிக்கைகள் துவங்கும்' என, போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.