டங்ஸ்டன் சுரங்கம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம் பழநியில் பிரகாஷ் காரத் பேச்சு
பழநி:''மதுரை டங்ஸ்டன் சுரங்க குத்தகையில் மத்திய அரசு உத்தரவை எதிர்த்து தமிழக சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலைப்பாட்டை வரவேற்கிறோம்,'' என, பழநியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டத்தில் மத்திய குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசினார்.அவர் பேசியதாவது: மத்தியில் பிரதமர் மோடி அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. வட மாநிலங்களில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடக்கிறது. அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதால் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.ஒன்றுபட்டு வாழும் இந்தியாவில் மசூதிகளில் ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 1991ல் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி 1947-ல் சுதந்திரம் பெறும்போது இருந்த வழிபாட்டு நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என உள்ளது. அதற்கு எதிராக மசூதிகளை ஆய்வு செய்ய நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன. இது மசூதிகளுக்கு கீழ் கோயில்கள் உள்ளது என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் என்றார்.எம்.பி., சச்சிதானந்தம், மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பாலபாரதி, பாண்டி, மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன், கமலக்கண்ணன், நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.