அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
நத்தம்: -நத்தத்தில் அரசு பஸ் நடத்துனர் ,பெண் பயணியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண்ணின் உறவினர்கள் பஸ்சை சிறை பிடித்ததை தொடர்ந்து போக்குவரத்து பாதித்தது. நத்தத்தை சேர்ந்தவர் வினிதா 24. நேற்று முன் தினம் இரவு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து நத்தத்திற்கு செல்வதற்காக தேவகோட்டை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். நடத்துநர் கண்ணையா இந்த பஸ் நத்தத்தில் நிற்காது என கூறினார். அந்த பெண் வேறொரு பஸ்சில் நத்தம் வந்து விட்டார். நத்தம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த வினிதா தேவகோட்டைக்கு சென்ற அரசு பஸ் நத்தத்தில் நிற்பதை பார்த்து நடத்துனரிடம் கேள்வி கேட்டார். நடத்துனர் உன்னிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என கூறி உள்ளார். ஆத்திரமடைந்த வினிதா, அவரது உறவினர்கள், பயணிகளும் சேர்ந்து பஸ்சை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணியை திட்டிய நடத்துனர் மன்னிப்பு கேட்க கோரி கோஷம் எழுப்பினர். எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்த கலைந்து சென்றனர்.