பராமரிப்பற்ற நிலையில் மழைநீர் சேகரிப்பு மைய குளம்
திண்டுக்கல் : திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு மைய குளம் பராமரிப்பின்றி துார்வாரப்படாமல் பாழாகும் நிலையில் உள்ளதால் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் முத்துசாமி குளம், சிலுவத்துார் சாலை குளம், கோட்டைகுளம், கோபால் சமுத்திரம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளங்கள் துார்வாரப்பட்டு மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் ஓரளவிற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் குளமாக இருப்பது சிலுவத்துார் ரோடு மழைநீர் சேகரிப்பு மைய குளம் தான். இக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. குளம் உள்ள சுற்றுப்பகுதிகளில் ஆயிக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் தினமும் காலை, மாலை வேளைகளில் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி செல்கின்றனர்.மழை பெய்தால் சுற்றி உள்ள ரவுண்ட்ரோடு புதுார், மெங்கில்ஸ்ரோடு, ஓய்.எம்.ஆர்., பட்டி, போன்ற இடங்களிலிருந்து இக்குளத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் நீர்வந்து சேரும் கால்வாய்கள் முறையாக இல்லை. இதனால் கழிவுகளோடு குளத்தில் வந்து மழைநீர் சேர்கிறது. கழிவுநீர் கால்வாயில் சேர்ந்துள்ள குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து விடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் சுகாதாரக்கேடுடன் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக குளக்கரையில் நடைப்பயிற்சி செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லை. இங்குள்ள கழிப்பறைகளும் பராமரிப்பின்றி உள்ளன. பொதுமக்கள் நலன் கருதியும், நிலத்தடி நீர்மட்டம் மாசடைவதை தடுக்க குளத்தை துார்வார வேண்டும். அதே நேரத்தில் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது. இதோடு குளத்தில் சேர்ந்துள்ள குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . கண்டுகொள்வதே இல்லை
தனபாலன், முன்னாள் மாவட்ட தலைவர், பா.ஜ., : குளம் மாசடைந்துள்ளது. 8 ஆண்டுகளாக எந்த பணிகளுமே நடக்கவில்லை. குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை , பாட்டில்கள் என ஏராளமாக நிறைந்து கிடக்கின்றன. குளத்தை துார்வார வேண்டும். மாலையில் தொடங்கி இரவு நேரங்களில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதால் மின்விளக்குகளை சரிசெய்திட வேண்டும். போதிய வெளிச்சமின்மையால் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் எதையுமே கண்டுகொள்வதே இல்லை. நடவடிக்கை இல்லை
ராமலிங்கம்மாள், கோபால்நகர், விரிவாக்கம் : வயதானவர்கள் தான் அதிகம் இந்த நடைபாதைகளை பயன்படுத்துகிறோம். சுற்றுப்பாதையில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வருவதே இல்லை. பயன்பாடின்றி உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும். மின்விளக்குகள் முறையாக இல்லை. குளத்தில் கழிவுகள் அதிகம் சேர்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் பயன்பாடின்றி உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் இந்த குளத்தினையாவது முறையாக பராமரிக்க வேண்டும்.