மரம் வளர்ப்பால் பசுமை போர்வையில் ஆர்.கோம்பை
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். கோம்பை ஊராட்சியில் அதிகளவில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதால் பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது.கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொப்பியசாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஊராட்சி பகுதி பசுமை நிறைந்த பகுதியாக, ஆண்டு முழுவதும் பசுமை போர்த்திய பூமியாக காட்சியளிக்கிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ள இங்கு ஆர்.கோம்பை, இந்திர காலனி, ரெட்டியபட்டி, சின்னழகு நாயக்கனுார், தாசம நாயக்கன்பட்டி, ஆனைகவுண்டன்பட்டி, புங்கம்பாடி உள்ளிட்ட 35 கிராமங்கள் உள்ளன.ஆர்.கோம்பை ஊராட்சி சார்பில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு கோவிலுார் ரோடு, குறிக்கோடங்கிபட்டி -- புங்கம்பாடி ரோடு, தாதனுார் ரோடு என பார்க்கின்ற இடமெல்லாம் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தை இந்த மரங்கள் தடுத்து விடுகின்றன. மரம் வளர்ப்பு பராமரிப்பிற்கான பணிகளும் நடந்து வருகிறது. மரம் வளர்ப்பில் கூடுதல் கவனம்
வி.பெருமாள், ஊராட்சி செயலாளர், ஆர்.கோம்பை: ஊராட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம். கோவிலுாரிலிருந்து ஆர்.கோம்பை நோக்கி வரும்போதே தெரிகிறது பசுமை நிறைந்த மரங்கள். ஊராட்சியின் பெரும்பாலான முக்கிய ரோடுகள், ஊராட்சி அலுவலகம், சுற்றுப்பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன. 500 மரக்கன்றுகள் வளர்த்து வருகிறோம். அவற்றை அரசு பள்ளிகளின் முன்பு மழைக்காலத்தில் நட்டு வைக்கவும், பசுமை பொருத்திய பூமியாக ஆர்.கோம்பை ஊராட்சியை தொடர்ந்து தக்க வைக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம். மரங்களை வெட்டுவதில்லை
வி.தர்மர், சமூக ஆர்வலர், ஆர். கோம்பை: அதிகளவில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதால் ஊராட்சி முழுவதும் பசுமை நிறைந்ததாக காணப்படுகிறது. விறகுக்காக கூட யாரும் மரங்களை வெட்டுவதில்லை. மாறாக வீடு , தோட்டங்களில் தென்னை உள்ளிட்ட பல்வேறு மரங்களை வளர்த்து வருகின்றனர்.இங்கு மாசு பாதிப்பு இல்லாமல் இருக்கிறது என்றார்.