பள்ளிகள் திறப்பு; மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்
திண்டுக்கல்: கோடை விடுமுறை முடிந்த பள்ளிகள் திறக்க திண்டுக்கல்லில் மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், பூக்களை துாவியும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.நேற்று காலையில் பள்ளிகளுக்கு புதிய சீருடைகளை அணிந்து வந்த மாணவர்களை மாலை அணிவித்து, பூக்களை துாவி, இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். முதன் முதலில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். சில குழந்தைகள் பள்ளியை நெருங்கியதும் அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டு பொருட்கள், இனிப்புகளை கொடுத்து சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.சில பெற்றோர் பள்ளி முன்பு நின்று தங்கள் குழந்தையுடன் அலைபேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளிலே மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சரவணன் வழங்கினார். திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டனர்.கொடைரோடு: அம்மையநாயக்கனூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். காமராஜர், அன்னை தெரசா, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேடமணிந்த பள்ளி மாணவர்கள் புதிய மாணவர்களையும், பெற்றோர்களையும் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். தலைமை ஆசிரியர் ஆர்தர் மாலை அணிவித்து வரவேற்றார்.