மரக்கன்றுகளால் பசுமையை காக்கும் பள்ளிகள்
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடுவதை கற்றுகொடுத்து நடவு செய்து அதை பராமரிக்கவும் செய்கின்றனர் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகத்தினர்.அறிவியல் வளர்ச்சியால் ஒருபுறம் எண்ணற்ற வசதிகள் நமக்கு கிடைத்த போதிலும், மறுபுறம் நச்சு புகையை வெளியிடும் வாகனங்களால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். இத்துடன் நம் வசதிக்காக எண்ணற்ற மரங்களை அழித்து விட்டோம். இதன் மூலம் பசுமை காடுகளின் எண்ணிக்கை குறைந்து போனது. இதனால் பருவநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு காற்று மாசுபட்டு சுவாசிப்பதற்கு துாய்மையான காற்று கிடைப்பதில்லை. இதிலிருந்து விடுபடுவதற்கு அதிகமான மரங்களை வளர்ப்பது அவசியம் என்பதை உணர்ந்த ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி வளாகத்தில் 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனர். இத்துடன் கடமை முடிந்தது என்றில்லாமல் மரம் நடும் நாள் விழா அன்று பள்ளி மாணவர்களுக்கு மரம் நடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வீடுகளில் வளர்க்க ஊக்குவிக்கின்றனர். துாய காற்று தேவை
சவும்யா, பள்ளி முதல்வர், ஒட்டன்சத்திரம் : சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடவு செய்வதால் அடுத்த தலைமுறை காற்று மாசுபாடு இன்றி உடல் நலத்துடன் வாழ வழி வகுக்கும். இதற்காக பள்ளி வளாகத்தில் பலவகையான மரக்கன்றுகளை நடவு செய்து அதனை முறையாக பராமரிக்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மரங்களை வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து குழந்தைகள் மனதில் பதிய வைத்தால் விரைவில் ஒட்டன்சத்திரம் பசும் சோலையாக மாறும். மரம் வளர்ப்போம்
சிவக்குமார், நிர்வாக அலுவலர், ஒட்டன்சத்திரம்: ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு நபருக்கு ஒரு மரம் என்ற கணக்கில் மரத்தை நடவு செய்து பராமரித்தாலே எண்ணிலடங்கா பயன்கள் ஏற்படும். இதற்காக மரம் நடும் நாள் விழாவினை பள்ளியில் கொண்டாடுகிறோம். அன்றைய தினம் பல மரக்கன்றுகளை நடுவதுடன் மாணவர்கள் அவர்கள் வீட்டில் நடவு செய்து பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகளை கொடுத்து அனுப்புகிறோம். மரம் வளர்ப்பேன் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைத்தால் போதும், எண்ணற்ற மரங்கள் உருவாகிவிடும்.