உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பசுமைக்கு வித்திடும் விதை பந்துகள் தன்னார்வலர்கள்

பசுமைக்கு வித்திடும் விதை பந்துகள் தன்னார்வலர்கள்

பழநி: மரங்களை வளர்க்க விதை பந்துகள் தயாரிப்பதில் பழநியை சேர்ந்த தன்னார்வலர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர் பழநியை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பசுமை போர்வையை உருவாக்க விதைகளை சேகரித்து விதைப்பந்துகளை தயாரித்து ரோட்டோரங்கள், குளக்கரைகளில் துாவி மர வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.விதைப்பந்துகளில் பூவரசு, நாவல், அரசமரம், வேம்பு உள்ளிட்ட மரங்களின் விதைகளை தயாரித்து வருகின்றனர். இந்த விதை பந்துகளை தனிப்பட்ட விழா நாட்களில் இலவசமாக வழங்கியும் வருகின்றனர். இது தவிர பனை விதைகளையும் நட்டு வருகின்றனர். இதற்கு தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மழைக்காலத்திற்கு முன்பு துாவப்படும் விதைப்பந்துகள் விரைவில் முளைத்து மரங்களாக வளர துவங்கும். தற்போது அதற்கான விதைப்பந்துகளை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை

சரண்யா, விதைப்பந்து தயாரிப்பாளர்: கோடைகாலத்தில் விதைகள் அதிக அளவில் கிடைக்கும். இதனை சேகரித்து விதை பந்துகள் தயாரிக்கிறோம். இந்த விதைப்பந்துகளை தன்னார்வலர்கள் மூலம் குளக்கரை, ரோட்டோரங்களில் துாவுகிறோம். சிலர் வீட்டு விசேஷங்களில் விதைப்பந்துகளை பரிசாக வழங்குகிறோம். இதை அதிக அளவில் ஊக்கப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்குகிறோம்.

மரங்களாவதால் மகிழ்ச்சி

கோகுல கிருஷ்ணன், தன்னார்வலர்: 2024 முதல் விதைப்பந்துகளை தயாரித்து மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் துாவி வருகிறோம். அவற்றில் பல மரங்கள் முளைத்துள்ளன. பழநி பகுதியில் வெளியூரில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ