கிடப்பிலிருக்கும் அரசு பணிகளை உடனே துவக்குங்க; மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தலாமே
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சுரங்கபாதை அமைப்பது, பாலம் கட்டுவது, ரோடுகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை உடனே துவக்குவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் பாலம் கட்டுவது, ரோடுகள் அமைப்பது, மேம்பாலங்கள் போடுவது, சுரங்க பாதைகள் கொண்டு வருவது என ஏராளமான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்த போதிலும் பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பலதரப்பு மக்களும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக அரசு நிதி ரூ.கோடிகணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்களிடம் புகாரளித்த போதிலும் சம்பந்தபட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கின்றனர். பணிகள் குறித்து ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் ஆய்வுக்குழு வந்தால் மட்டும் அந்த சமயத்திற்கு மட்டும் பணிகள் நடப்பதுபோல் பாவணை காட்டி மற்ற நேரங்களில் ஹாயாக அதிகாரிகள் வலம் வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் எல்லா பகுதிகளிலும் ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் கிடப்பிலிருக்கும் பணிகளை உடனே தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.