போலி சான்றுடன் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி : மேற்கு வங்கத்தில் சான்று பெற்றதாக போலீஸ் தகவல்
திண்டுக்கல்: போலி சான்றிழுடன் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி, பெற்றோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போலி சான்றிதழ்கள் மேற்கு வங்க மாநிலத்தில் பணம் கொடுத்து பெற்ற தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதன் 55. மனைவி விஜய முருகேஸ்வரி 47. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி 19. 2025 ல் நடந்த நீட் தேர்வில் 228 மதிப்பெண் பெற்றார். 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழை உருவாக்கி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கான அனுமதி பெற்றார். இது போலியானது என கண்டறியப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் வீரமணி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி குற்றப் பிரிவு போலீசார் மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி, பெற்றோரை கைது செய்தனர். விசாரணையில் போலி சான்றிதழ் மேற்குவங்கத்திலிருந்து பெற்றது தெரியவந்தது. இதற்காக காருண்யா ஸ்ரீவர்ஷினி, தாயார் விஜய முருகேஸ்வரி மேற்குவங்கத்தை சேர்ந்த கும்பலுக்கு ரூ.25ஆயிரம் கொடுத்து போலிச் சான்றிதழை பெற்றுள்ளர். இதையடுத்து போலி சான்றிதழை உருவாக்கி கொடுத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.