ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அய்யலுார் அரசு பள்ளி இடம் பிரச்னைக்கு தீர்வு எட்டுவதில் நீடிக்கும் இழுபறி
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற முடியாமல் அரசு நிர்வாகம் திணறுவதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பரிதவிக்கின்றனர்.இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி தரம் உயர்ந்து உயர் நிலைப்பள்ளியாக மாறியதால் கூடுதல் கட்டடங்கள் கட்ட வேண்டிய நிலையில் மலைக்குன்று சரிவு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 3.75 ஏக்கர் இடத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. பள்ளிக்கூடத்திற்கான இடம் என தெரிந்ததும் சிலர் அங்கு குடிசைகளை அமைத்தனர். இதற்கிடையில் முதல் கட்டடம் உருவாகி வகுப்புகள் நடக்கிறது. தற்போது கூடுதலாக இரு கட்டடங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கிய நிலையில் அரசு துறைகள் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி கால அவகாசம் தந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபடுவது, மாணவர்களை அச்சுறுத்தும் வேலைகளை செய்கின்றனர். ஆக்கிரமிப்பு தொடர்புடையது என்பதால் வடமதுரை போலீசார் பள்ளி நிர்வாகத்தினரின் புகாரை பெற மறுத்ததால் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக தி.மு.க.,-அ.தி.மு.க.,-பா.ஜ.,- தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் ரோடு மறியல் நடத்தினர். இதனிடையே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இயங்குவதால் பிரச்னைக்கு தீர்வு எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. எதற்கெடுத்தாலும் உயர்நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றால் தான் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்ற நிலையை பின்பற்றாமல் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி தங்கம்மாபட்டி பள்ளி இட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.