உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எல்லையில் இருப்பதால் இல்லை தார் ரோடு பாதிப்பில் கெண்டமுத்து நாயக்கனுார் மக்கள்

எல்லையில் இருப்பதால் இல்லை தார் ரோடு பாதிப்பில் கெண்டமுத்து நாயக்கனுார் மக்கள்

வடமதுரை: சித்துவார்பட்டி ஊராட்சியின் எல்லைப்பகுதியில் இருப்பதால் கெண்டமுத்து நாயக்கனுாருக்கு முதன்மை அடிப்படை வசதியான தார் ரோடு இன்னும் கிடைக்காமல் உள்ளதுசித்துவார்பட்டி ஊராட்சியின் சீரங்ககவுண்டனுாரையொட்டி வரட்டாற்றின் மறுகரைப் பக்கம் அமைந்துள்ளது கெண்டமுத்து நாயக்கனுார். வரட்டாறு குறுக்கிடுவதால் இக்கிராமத்தினர் ஊராட்சி தலைமையிடமான சித்துவார்பட்டிக்கோ, ஊராட்சி சார்ந்த மற்ற கிராமங்களுக்கு செல்லவோ ரோடு வசதியில்லை. அய்யலுார் பேரூராட்சியின் நிலப்பகுதி வழியே கருவார்பட்டி சென்று அங்கிருந்து அய்யலுார் பாலவிடுதி ரோட்டில் பயணித்து மீண்டும் சீரங்க கவுண்டனுார் வழியே சித்துவார்பட்டி செல்லலாம். ஊராட்சியிலும் ரோடு அமைய வேண்டிய பகுதி பேரூராட்சியிலும் இருப்பதால் இப்பகுதிக்கு இதுநாள் வரை தார் ரோடு அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர்ஊராட்சி முயற்சியில் பேரூராட்சி பகுதிக்குள் அமைக்கப்பட்ட கப்பி ரோடு மட்டுமே தற்போது உள்ளது. இதுவும் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எல்லை பிரச்னை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி இக்கிராமத்திற்கு ரோடு வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிடப்பில் திட்டம்

சி.சிவக்குமார், ஐ.டி., ஊழியர், கெண்டமுத்துநாயக்கனுார்:கெண்டமுத்து நாயக்கனுார் கிராமம் சித்துவார்பட்டி ஊராட்சி பகுதிக்குள் உள்ளது. அதே நேரம் பாலம் இல்லாத வரட்டாறு குறுக்கே செல்வதால் மக்கள் கருவார்பட்டி வழியே தான் வெளியூர் செல்ல முடியும். ஆனால் கிராம விளிம்பு வரை பேரூராட்சி பகுதிக்குள் இருப்பதால் ஓட்டு வங்கி அரசியல் கணக்கில் எங்களுக்குரிய ரோடு வசதி பேரூராட்சி பகுதியினருக்கு தேவையின்றி உள்ளது. இதனாலே தார் ரோடு அமையாமல் உள்ளது. கெண்டமுத்துநாயக்கனுாரில் பயனற்ற கிணறை அகற்றிவிட்டு கலையரங்கம் அமைப்பதாக கூறி துவங்கிய திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.

-அமைவதில் தாமதம்

வி.நாகராஜன், தி.மு.க., வார்டு செயலாளர், கருவார்பட்டி:கெண்டமுத்து நாயக்கனுார் சித்துவார்பட்டி ஊராட்சி சார்ந்தது என்றாலும் வெளியூர் செல்ல பேரூராட்சி பகுதியான கருவார்பட்டி வழி தான் பயன்படுகிறது. ஆனால் இப்பகுதி முழுவதும் பேரூராட்சி பகுதியில் இருப்பதால் ரோடு அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி தார் ரோடு அமைக்க வேண்டும்.

பஸ் வசதியும் குறைவு

-என்.ரவிக்குமார், ஊராட்சி உறுப்பினர், சீரங்க கவுண்டனுார்: கரூர் மாவட்டத்தையொட்டிய எல்லைப்பகுதியில் இருப்பதால் போக்குவரத்து வசதி என்பது குறைவாக உள்ளது. முன்பு திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை, அய்யலுார், கடவூர் வழியே கரூருக்கு விரைவு பஸ் இருந்தது. அதை மீண்டும் இயக்க வேண்டும். இதுபோன்ற வழித்தடங்களில் லாபத்தை மட்டும் பார்க்காமல் அனைத்து பகுதி மக்களுக்கான சமசீரான சேவை என்ற அடிப்படையில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ