உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் வடக்கான் குளம்

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் வடக்கான் குளம்

நத்தம்: -நத்தம் அருகே வீரசின்னம்பட்டி வடக்கான் குளம் சீமை கருவேல மரங்கள், நீர் வழி வாய்க்கால், தனியார் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளால் தண்ணீர் இன்றி அடர்ந்த கருவேலம் காடு போல் காட்சி அளிக்கிறது.நத்தம் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் உள்ள இக்குளம் 20 ஏக்கரில் உள்ளது. இக்குளத்திற்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டான்குளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வருகிறது. வீரசின்னம்பட்டி வடக்கான் குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கும்.சில ஆண்டுகளாக காட்டான் குளத்திலிருந்து வடக்கான் குளத்திற்கு வரும் நீர்வழி வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. பருவ மழை போதுமான அளவு பெய்தும் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் உள்ளது. குளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் வடக்கான் குளத்தின் 80 சதவீதம் சீமை கருவேல மரங்கள்,முள் செடிகளின் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் ரோட்டில் இருந்து பார்த்தால் குளம் காடு போல் காட்சியளிக்கிறது.மேலும் குளத்தில் ஒரு பகுதி தனிநபர் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. குளத்தின் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு நீர் வழி வாய்க்கால் , குளத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தில் தண்ணீரை தேக்கி விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்விக்குறியாகும் விவசாயம்

தனபால், விவசாயி, வீரசின்னம்பட்டி: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் முறையாக பராமரிப்பு செய்யாமல் உள்ளது. இதனால் மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ள விவசாயம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. போதுமான மழை பெய்தும் பெரும்பாலான குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. வீரசின்னம்பட்டி வடக்கான் குளம் சீமை கருவேல மரங்களால் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. மேலும் நீர் வழி வாய்க்கால் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றி காடு போல் காட்சி அளிக்கிறது. குளத்தை சீரமைக்க வேண்டும்.

நீர் செல்ல முடியாத நிலை

பந்தளராஜா மணிகண்டன், சமூக ஆர்வலர், வீரசின்னம்பட்டி: வீரசின்னம்பட்டி காட்டான் குளம் அணைக்கட்டு வரத்து வாய்க்கால் வழியாக 20க்கு மேற்பட்ட குளங்களுக்கு செல்லும் நீர்வழி பாதையானது ஆக்கிரமிப்பில் உள்ளது. வடக்கன்குளம், புதுக்குளம், ஆலங்குளம், ஒட்டங்குளம் பகுதிகளுக்கு செல்லும் நீர் ஆக்கிரமிப்புகளால் குளங்களுக்கு நீர் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடனடியாக தலையிட்டு கண்மாய்களின் நீர்வள ஆதாரத்தை உறுதிப்படுத்த காட்டான் குளம் அணைக்கட்டு வரத்து வாய்க்கால்களை சீரமைத்து குளத்தை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை