எங்கும் இல்லை வசதிகள்... தனித்தீவு போல் குடியிருப்பு கலெக்டர் அலுவலகம் ஏங்கும் வி.என்.வளாக குடியிருப்போர்
திண்டுக்கல் : பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வி.என்.வளாக குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் எந்த ஒரு வசதியின்றி தனித்தீவு போன்று காடுகளில் வசிக்கும் உணர்வுடன் காலத்தை கடப்பதாக இங்குள்ள குடியிருப்போர் குமுறினர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வி.என்.வளாக குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் அண்ணாத்துரை, துணைத் தலைவர் அர்ஜூன், பொறுப்பாளர்கள் ரேணுகா, ரஞ்சனி, ஜான்சி, கிளாரா கூறியதாவது: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருமுறை அதிகாரிகள் விசிட் செய்தால் ஆபத்தின் ஒட்டுமொத்த தன்மையும் புரியும்.அடிப்படை வசதி செய்து தர தொடர்ந்து மறுத்து வருவதால் இப்பகுதி மக்களுக்கு காட்டில் வசிப்பதை போலான உணர்வு தோன்றுகிறது. பொது பணி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் கட்டடம் கால் நுாற்றாண்டாகியும் பராமரிக்காமல் கிடப்பது நிர்வாகத்தின் அலட்சிய தன்மையை காட்டுகிறது. இது தற்போது கட்டி தரப்படும் தொகுப்பு வீடுகளின் தரத்தில் பாதியை கூட எட்டாத நிலையில் உள்ளது. இங்குள்ள குடும்பத்தினர் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.ரோடு வசதி முற்றிலுமில்லை. பள்ளம், மேடுகளிலான ரோடுகளில் வாகன பயணம் செய்வது சாகசமானதாகும். கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றம் உட்பட முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் சுற்றி இருந்தாலும் இந்த குடியிருப்புகளை மட்டும் கண்டுகொள்ளமால் தனித்தீவு போல் விட்டுள்ளனர். இரவானால் இருளின் ஆதிக்கத்தில் எங்கள் பகுதி அபாயத்தில் சூழ்ந்து விடுகிறது. இருளை பயன்படுத்தி சமூக குற்ற செயல்கள் அமோகமாக அரங்கேறுகிறது.பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவற்றில் வளர்ந்த மரங்கள் திகிலில் உறைய வைக்கிறது. எந்தவித அடிப்படை வசதியையும் செய்து தர இயலாத மாவட்ட நிர்வாகமானது பாழடைந்த கட்டடத்தில் ஊடுருவியுள்ள மரங்களைஅகற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் இன்னும் சில ஆண்டுகள் இந்த கட்டடங்களின் உறுதி தன்மை காக்கப்படும். அடிப்படை வசதி ஏதுமில்லாமல் தேங்கி கிடக்கும் கழிவு நீரில் கொசு பண்ணை உருவாகி உள்ளது.இதனால் சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு குடியிருப்பு பகுதி மக்களுக்கு சொந்தமான நோய்களாக அடிக்கடி வந்து போகிறது. கட்டடத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களிலிருந்து படையெடுக்கும் பாம்புகளால் குடியிருப்பாளர்கள் தினமும் அச்சத்துடன் வாழ்கின்றனர். பொதுப்பணிதுறை, மாவட்ட நிர்வாகம் எங்களையும் மதித்து அடிப்படை வசதி செய்து கொடுத்தால் தான் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலே உருவாகும். தண்ணீருக்காக மட்டும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறோம். ஆனால் தண்ணீருக்கு அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது. அருகே உள்ள அம்மா பார்க் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. தண்ணீர்தொட்டியை திருடிச் சென்று விட்டனர் . எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் எல்லாம் எட்டாக்கனியாகவே உள்ளது.அரசு குடியிருப்புகள் அரசின் கண் பார்வை படாமல் கால் நுாற்றாண்டுக்கும் மேல் இருப்பது ம புதிராகவே உள்ளது.