போலீஸ் ஸ்டேஷன்களில் இல்லை போதுமான போலீசார்; கூடுதல் பணி சுமைகளால் தினம்தோறும் தவியாய் தவிப்பு
மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கு, மகளிர், குற்றப்பிரிவு, மதுவிலக்கு என 46 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இவை 7 சப்- டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு டிவிஷனுக்கும் டி.எஸ்.பி., தலைமையிலான கண்காணிப்பு அதிகாரிகள் உள்ளனர். தற்போது ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறையால் விசாரணை, ரோந்து, எழுத்து, கம்ப்யூட்டர் வேலைகள், மாற்றுப்பணிக்கும் கூட ஆள் இல்லாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.நகர் , கிராமப்பகுதி ஸ்டேஷன்களில் தேவைக்கு ஏற்ப பணி அமர்த்தப்படும் போலீஸ் எண்ணிக்கை மாறுபடும். திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், கொடைக்கானல் உள்ளிட்ட மக்கள் புழக்கம் மிகுந்த முக்கிய இடங்களில் உள்ள ஸ்டேஷன்களில் கூட போதுமான போலீஸ் இல்லாமல் உள்ளனர். இதனால் வழக்கமான விசாரணை பணிகளுக்கு போலீஸ் இல்லாமல் மணிக்கணக்கில் மக்கள் ஸ்டேஷன்களில் காத்துக்கிடக்கும் சூழல் உருவாகிறது. ஒரே நேரத்தில் இருவேறு இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் போது ஸ்டேஷன்களில் டூட்டியில் உள்ளவர்கள் அருகே உள்ள ஸ்டேஷன்களை சேர்ந்தவர்கள் என ஒட்டுமொத்த போலீசாரையும் ஒரே இடத்தில் பணியில்ஈடுபடுத்தும்போது புகார் தொடர்பாக ஸ்டேஷன் வருபவர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகிறது.