திண்டுக்கல் மாவட்டத்தினர்மூன்று பேர் நெரிசலில் பலி
வடமதுரை: கரூர் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியை சேர்ந்த இருவர் பலியாயினர். அவர்களது குடும்பத்திற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். ஒட்டன்சத்திரம் பெண் ஒருவரும் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பாகாநத்தம் ஒத்தப்பட்டியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் 26, எரியோடு வடக்கு தளிப்பட்டியை சேர்ந்த சங்கர்கணேஷ் 35, ஆகியோர் கரூர் பகுதியில் பணிபுரிந்தனர். நேற்றுமுன்தினம் அங்கு நடந்த த.வெ.க., பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் விஜயை காணும் ஆவலில் சென்றிருந்த இருவரும் நெரிசலில் சிக்கி இறந்தனர். இருவரது உடல்களும் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிசடங்கு செய்து எரியூட்டப்பட்டது. இரு குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்த வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் தலா ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார். ஓட்டன்சத்திரம் பெண் பலி ஒட்டன்சத்திரம் அருகே கொல்லபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் 37. மனைவி பாத்திமாபானு 29. இருவரும் நேற்று முன்தினம் கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் இருவரும் சிக்கினர். இதில் மயக்கமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். பாத்திமா பானு நெரிசலில் சிக்கி பலியானார். இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார்.