உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அமைச்சர் பெயரை கூறி மிரட்டுறாங்க; குறைதீர் கூட்டத்தில் திருப்பூர் பெண் முறையீடு

 அமைச்சர் பெயரை கூறி மிரட்டுறாங்க; குறைதீர் கூட்டத்தில் திருப்பூர் பெண் முறையீடு

திண்டுக்கல்: ஆளுங்கட்சி அமைச்சரின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என திருப்பூர் பெண் முறையீடு உட்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தில் 327 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்ட்டனர். டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டம் ஓடக்காட்டை கோதை நாச்சியார் கொடுத்த மனுவில், திண்டுக்கல்லை சேர்ந்த ரியஸ் எஸ்டேட் அதிபர் ஒருவர் ரெட்டியார்சத்திரத்தில் எங்களுக்கு சொந்தமான இடத்தை கிரையம் பெற்றதோடு அவரது தொழிலுக்காக என்னிடம் இருந்து ரூ. கோடிக்கணக்கில் முதலீடு தொகையை பெற்றார். அந்த தொகையை தராமல் மோசடி செய்துவிட்டார். அவரிடம் கேட்ட போது தனக்கு ஆளுங்கட்சி அமைச்சர்களுடன் அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரிடம் நாங்கள் இழந்த தொகை, நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். பாலகிருஷ்ணாபுரம் பி.காப்பிளியப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றவேண்டும். அதோடு புதிதாக கட்டப்பட்டு காட்சிப்பொருளாக இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்திருந்தனர் . வடமதுரை செங்குளத்துப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், கிராமத்தில் விவசாய நிலத்தில் மயானம் அமைக்க சிலர் முயன்று வருகின்றனர். அதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறையை சேர்ந்த மகேஷ்வரன் தனது மாற்றுத்திறனாளி மகனை தோளில் சுமந்தபடி வந்து கொடுத்த மனுவில், எனது குடும்பம் வறுமையில் இருக்கிறது. மகனின் பராமரிப்பு செலவுகளை கூட சரியாக கவனிக்க முடியவில்லை. எங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக பணியாளராக உள்ளேன். எனவே பணிநிரந்தரம் செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என கேட்டிருந்தார். திண்டுக்கல் வேலுநாச்சியார் சேனை பெண்கள் அமைப்பினர் சார்பில் வேலுநாச்சியார் வேடமிட்டு வந்த சிறுமிகள் கொடுத்த மனுவில், 'திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கட்டடம் வேலுநாச்சியார் வளாகம் என்ற பெயரில் தான் இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் புதுப்பிக்கும் பணி நடந்தபோது அந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. வேலுநாச்சியார் பெயர் பலகை வைக்க வேண்டும் என கேட்டிருந்தனர். திண்டுக்கல் ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மாற்றுத்திறனாளி மகள் லின்சியாவுடன் வந்து கொடுத்த மனுவில், மாற்றுத்திறனாளியான மகள் தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்று வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார். எங்கள் வீடு சேதமடைந்த நிலையில் உள்ளது. வீட்டின் மேல்பகுதியில் மின்சார கம்பிகள் செல்கின்றன. வீட்டை புதுப்பிக்க வேண்டுமெனில் மின்கம்பிகளை மாற்றுப்பாதையில் அமைக்கவேண்டும். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. மாற்றுத்திறனாளி வீராங்கனையான எனது மகளையும், என்னையும் அலைக்கழிப்பு செய்கின்றனர். இதன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்