கொடைக்கானல் வான சுற்றுலா தலத்தில் காட்டுமாடு தாக்கி சுற்றுலாபயணி காயம்
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை காட்டுமாடுகள் தாக்குவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. நேற்று குணா குகை அருகே சுற்றுலா பயணி ஒருவர் காட்டுமாடு தாக்கி காயமுற்றார்.கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். வன சுற்றுலாத் தலங்களான மோயர் சதுக்கம், தூண்பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். அடர்ந்த வனத்தில் உள்ள இப்பகுதிகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டு வனச்சரகம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குணா குகை வாகன நிறுத்துமிடத்தில் காட்டுமாடால் தாக்கப்பட்டதில் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது. மேலும் சிலர் காயம் அடைந்தனர்.நேற்று கேரளா நெடுங்கண்டத்தைச் சேர்ந்த ஜானி வர்கீஸ் 64, வாகன நிறுத்தும் இடத்திலிருந்து குணா குகை செல்ல முயன்ற போது அவ்வழியாக வந்த காட்டுமாடு தாக்கியதில் காயம் அடைந்தார். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.வன சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழலால் மனித- வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. வனத்துறை இவ்விஷயத்தில் மெத்தனமாக உள்ளது. தற்போதைய சூழலில் கூடுதல் சூழல் சுற்றுலா காவலர்களை நியமித்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.