திண்டுக்கல்லில் அறிவிக்கப்படாத மின்வெட்டு; மக்கள் கொந்தளிப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தினசரி பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டினர். திண்டுக்கல்லில் என்.ஜி.ஓ.,காலனி, காந்திஜி நகர்,எம்.வி.எம்.,நகர், கூட்டுறவு நகர், ஏ.கே.எம்.ஜி., நகர், நேருஜி நகர் பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கி, வணிக நிறுவனங்கள், இரும்பு விற்பனை நிறுவனங்கள், இன்ஜினியரிங் கடைகள், சேவை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், அப்பார்ட்மென்ட்கள் என மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்களுடன் சிறு வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். குடியிருப்புவாசிகள் கூறுகையில், ''முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் அடிக்கடி மின்தடை செய்கின்றனர். மின் கம்பங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. நிறைய இடங்களில் உறுதியான இணைப்புகள் இல்லாமல் மின் கம்பிகள் உரசும் நிலையில் உள்ளது. இதுகுறித்து புகார் செய்தால் மின் ஊழியர்கள், அதிகாரிகள் என யாரும் கண்டுகொள்வதில்லை. மின்னகம் உள்ளிட்ட புகார், சேவை மையத்தின் மூலம் பதிவுசெய்தால் மட்டுமே பிரச்னை இருக்கும் தெருக்களில் தலைக்காட்டுகிறார்கள். குறைகளை சலிப்போடு சரிசெய்யும் ஊழியர்கள் புகார் என்றால் நேரடியாக எங்களுக்கே சொல்லக்கூடாதா அதட்டலுடன் பேசுவது பொதுமக்களை மிரட்டும் தொணியில் உள்ளது. என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட ஒரு சில மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்வது குதிரைகொம்பாக உள்ளது.இவர்கள் புகார் தொடர்பான அழைப்பை ஏற்காது அலட்சியத்தில் உள்ளனர். மின்சாரம் இன்றி பகல் நேரத்தில் முடங்கிய வேலையை இரவில் தொடர முடியுமா. இதில் இரவிலும் மின்வெட்டு தொடர்வதால் குழந்தைகள் துாங்க முடிவதில்லை, பிள்ளைகள் வீட்டுப்பாடங்கள் செய்ய முடிவதில்லை. மின்வாரியத்தின் அறிவிக்கப்படாத மின்வெட்டும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில், 'மின் சப்ளை செய்யும் உயர் அழுத்த மின்பாதையில் திடீர் பழுது ஏற்பட்டதால் எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டது. பாதிப்பை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டதன்பேரில் ஊழியர்கள் துரிதமாக பணி செய்து 30 நிமிடத்தில் மீண்டும் மின் சப்ளை செய்யப்பட்டது ' என்றனர்.