வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம்; புதிய கட்டடத்திற்கு டிச. 5 ல் பூமி பூஜை
வேடசந்துார்; தினமலர் செய்தி எதிரொலியாக வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதோடு ,புதிய கட்டடத்திற்கு டிச. 5 ல் பூமி பூஜை போட உள்ளதாக வேடசந்தூர் எம்.எல்.ஏ.,காந்திராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.வேடசந்தூர் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தின் ஒரு சில பகுதிகளில் கூரை பெயர்ந்து விழ பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 6 மாதங்களுக்கு முன்பு கட்டடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் தள்ளிச் சென்ற நிலையில் பேரூராட்சி சார்பில் இரண்டு தகர செட்கள் அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள்,பள்ளி மாணவர்கள் அவதிப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதைதொடர்ந்து வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட்டை தற்காலிகமாக மாற்று இடத்தில் மாற்றி அமைக்கவும்,புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்குமான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் பஸ் ஸ்டாண்டை தற்காலிகமாக ஆத்துமேட்டில் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பேசிய எம்.எல்.ஏ., காந்தி ராஜன், ''புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக அரசு ரூ.ஒரு கோடியே 19 லட்சம் ஒதுக்கி உள்ளதாகவும், டிச.5 ல் அதற்கான பூமி பூஜை போட உள்ளதாக '' தெரிவித்தார்.தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், ஆர் டி ஓ., சண்முகஆனந்த், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், இன்ஸ்பெக்டர் வேலாயுதம், தி.மு.க., பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் கவிதாமுருகன் பங்கேற்றனர்.