உழவர் சந்தை நுகர்வோர்களுக்கு காய்கறி தொகுப்பு
வேடசந்தூர்: வேடசந்துாரில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ள உழவர் சந்தையில் குலுக்கல் முளறயில் நுகர்வோர் தேர்தெடுக்கப்பட்டு இலவச காய்கறி தொகுப்பு வழங்கப்படவுள்ளது.வேடசந்தூர் சந்தை வளாகத்தின் ஒரு பகுதியில் கடந்த 2022 ல் உழவர் சந்தை துவக்கப்பட்டு 16 கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. 27 விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 மெட்ரிக் டன் சூரிய மின்சக்தி குளிர்பதன கிடங்கு வசதியும் உள்ளது. இந்த உழவர் சந்தை தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் நாளை மறுதினம் முதல் முழு வீச்சுடன் செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி காய்கறிகள், பழங்கள், கீரைகளை நேரடியாக கொண்டு வந்து விற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், முதல் 10 நாட்களுக்கு காய்கறிகள் வாங்க வரும் நுகர்வோர் இருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 5 கிலோ மதிப்புள்ள காய்கறிகளின் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையினர் தெரிவித்தனர்.