பள்ளி மாணவர் தற்கொலையில் கிராம மக்கள் போராட்டம் : தலைமையாசிரியர் இடமாற்றம்
தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பூலத்துாரில் பிளஸ் 1 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்ததில் நியாயமான விசாரணை நடக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து அப்பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.பூலத்துாரை சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜபாண்டி 16. நிலக்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பூலத்துாரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த நிலையில் செப்.11ல் அப்பள்ளிக்கு மதிப்பெண் சான்றிதழ் பெற சென்ற ராஜபாண்டி பின்னர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதிப்பெண் சான்றிதழ் தர மறுத்த தலைமையாசிரியர் சவுந்தரபாண்டியன் ஒரு பிரச்னை தொடர்பாக திட்டியதே அவரின் தற்கொலைக்கு காரணம் எனக்கூறிய பொதுமக்கள், தலைமையாசிரியரிடம் முறையாக விசாரிக்காமல் போலீசார் உண்மைக்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்ததாக குற்றம் சாட்டினார். உரிய நடவடிக்கைகோரி அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா கூறுகையில் ''சம்பவம் தொடர்பாக பூலத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முதன்மை கல்வி அதிகாரியிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமையாசிரியர் சவுந்தர பாண்டியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.