புறநகர், ஊராட்சி,பேரூராட்சிகளில் குடிநீர் சப்ளை முறையாக இல்லை; இரு மாதங்களுக்கு ஒரு முறை வருவதால் தவிப்பு
மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் சப்ளை ஓரளவிற்கு சரியாக இருந்தாலும், புறநகர் பகுதிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. குடிநீரானது கீழ்நிலைத்தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டிகளுக்கு அனுப்பபட்டு அங்கிருந்து குழாய்கள் வழியாக பொதுமக்களுக்கு சப்ளை நடப்பது வழக்கம். ஆட்கள் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் சப்ளையானது முறையாக நடப்பதில்லை. இரு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை நடக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர், போர்வெல் நீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு குடம் நீர் ரூ.20 என ஒரு நாள் அத்தியாவசிய உபயோகத்திற்கு 5 குடம் நீரை ரூ.100 க்கு வாங்குகின்றனர். இதனால் மாதம் ரூ.3 ஆயிரம் வரை குடிநீருக்காக செலவு செய்யும் நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாததால் மக்கள் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி பழகிவிட்டனர். இது தொடர்பான புகார் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் அன்று நடக்கும் குறைதீர் கூட்டத்தில் வாரந்தோறும் மக்கள் வருவதை காண முடிகிறது. ஆனால் தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இதிலும் ஒரு பகுதிக்கு மட்டும் சப்ளை செய்து, குறிப்பிட்ட சமூகத்தினர் உள்ள பகுதிக்கு சப்ளை செய்யாதது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீடித்த வண்ணம் உள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை
எல்லா கிராமங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஆப்பரேட்டர்களின் எண்ணிக்கை குறைவு, மேல்நிலைத்தொட்டிகள் போதுமான அளவிற்கு இல்லாதது, பராமரிப்பு செய்யாமல் விடுவது, போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களினால் குடிநீர் விநியோக முறை பாதிப்படைகிறது. நகர் பகுதிகளில் ஓரளவிக்கு தண்ணீர் கிடைப்பதால் ஊராட்சி அமைப்புகள் பிரச்னைகள் வெளியே தெரிவதில்லை. ஊராட்சி அமைப்பு நிர்வாகிகள், பிரதிநிதிகள், குடிநீர் வடிகால் அதிகாரிகள், வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து பேசி உரிய வழிமுறைகளை கண்டறிந்து சரிசெய்தால் மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.- சரத்குமார், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் , திண்டுக்கல்.