காட்டுமாடு புதைப்பு: ஒருவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மின்வேலியில் சிக்கி பலியான காட்டு மாட்டை புதைத்த விவகாரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடுகின்றனர்.கொடைரோடு பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமு. இவருக்கு வனப்பகுதியை யொட்டி விவசாய நிலம் உள்ளது. அங்கு 2 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளார். பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மின்வேலி அமைத்து இரவு நேரங்களில் மின்சாரத்தை செலுத்தினார். சில தினங்களுக்கு முன் காட்டுமாடு ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது. இதைப்பார்த்த ராமு, அதே பகுதியை சேர்ந்த கருப்பையா,செல்வம் உதவியுடன் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்தனர். இதையறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் புதைக்கப்பட்ட காட்டுமாட்டை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர். கருப்பையா கைது செய்யப்பட்டார். மற்ற இருவரையும் தேடுகின்றனர்.