உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பி.எஸ்.என்.எல்., டவர்கள் தமிழகம் புறக்கணிப்பா; எம்.பி., சச்சிதானந்தம் சந்தேகம்

பி.எஸ்.என்.எல்., டவர்கள் தமிழகம் புறக்கணிப்பா; எம்.பி., சச்சிதானந்தம் சந்தேகம்

திண்டுக்கல்; நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல்.,க்கு புதிதாக 92 ஆயிரம் டவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதா என சந்தேகம் எழுவதாக எம்.பி. சச்சிதானந்தம் கூறினார். திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி : 'பி.எஸ்.என்.எல்., 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை கொண்டாடி உள்ளது. இந்தத்துறையின் சேவை மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. 2012ல் தனியாருக்கு 4ஜி சேவை மத்திய அரசு வழங்கியது. அப்போதே பி.எஸ்.என்.எல்.,க்கு வழங்காததால் வாடிக்கையாளர்கள் தனியாரை நோக்கி சென்றனர். 7 ஆண்டுகள் தாமதமாக 2019ல் 4ஜி சேவை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்.,க்கு 424 அலைபேசி டவர்கள் உள்ளது. இதில் 212 டவர்கள் நகர்பகுதியில் உள்ளது. மலைப்பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில்லை. சாதாரண அலைபேசி வைத்திருப்பவர்கள் கூட சிக்னல் கிடைக்காமல் சிரமப்படுகிறனர். 4ஜி டவர் அமைக்கப்பட்ட இடங்களில் 2ஜி கிடைக்காததால் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடை ஏற்படுகிறது. ரேஷன் கடைகள், பள்ளிகளில் ஸ்மார்ட் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை செய்ய முடிவதில்லை. 92 ஆயிரம் புதிய டவர் அறிவித்துள்ள பிரதமர், அதில் எத்தனை தமிழகத்தில் அமைக்கிறார்கள் என சொல்லவில்லை. எனவே, மற்றத்திட்டங்களை போல இதிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதா, என சந்தேகம் வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ