அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியில் முறையாக இயக்கப்படாத அரசு பஸ்சை பெண்கள் சிறை பிடித்தனர்.திண்டுக்கல்லில் இருந்து ஆவிளிப்பட்டிக்கு தினமும் காலை 7:10 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் 7:40 மணிக்கு ஆவிளிப்பட்டிக்கு வந்தடையும். மீண்டும் 7:45 மணிக்கு புறப்பட்டு 8:30 மணிக்கு திண்டுக்கல் செல்லும்.இதன் மூலம் ஆவிளிப்பட்டி, பெருமாயூர், களத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.10 நாட்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்த பஸ் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. நேற்று காலை பஸ் ஆவிளிப்பட்டிக்கு 8:30 மணிக்கு வந்தது. மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் தலைமையில் அப்பகுதி பெண்கள் பஸ்சை சிறை பிடித்தனர். சாணார்பட்டி போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க பஸ்சைவிடுவித்தனர்.