குண்டேரிபள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
குண்டேரிபள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்புடி.என்.பாளையம்: -டி.என்.பாளையம் அருகே உள்ள, குண்டேரிபள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.டி.என்.பாளையம் அருகே, கொங்கர்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குன்றி மலை அடிவாரத்தில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் குண்டேரிபள்ளம் அணை கட்டப்பட்டது. குன்றி, கடம்பூர், விளாங்கோம்பை, மல்லியதுர்க்கம் உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்யும் மழை நீர், 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக அணைக்கு தண்ணீர் வருகிறது. 41 அடி உயரமுள்ள அணையின் இரு வாய்க்கால்கள் மூலமாக கொங்கர் பாளையம், குண்டேரி பள்ளம், வினோபா நகர், மோதுார், வாணிபுத்துார், இந்திரா நகர், கோவிலுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகிறது.இந்நிலையில், இந்தாண்டு பாசனத்திற்காக அணையில் இருந்து நேற்று காலை, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தினகிரி, விவசாய சங்க தலைவர் குப்புராஜ் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள், அணையின் இரு வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விட்டனர். இடது கரை வாய்க்காலில், 18 கன அடி தண்ணீரும், வலது கரை வாய்க்காலில், 6 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.ஏப்., 16 வரை தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம், 57 நாட்களில், 42 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனவும், இடையிடையே, 15 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 41 அடி உயரம் உள்ள அணையில், 20 அடிக்கு சேறு தேங்கி இருப்பதால், அணையில் குறைந்த அளவே தண்ணீர் தேங்குவதால், இப்பகுதி விவசாயிகள் வெங்காயம், மஞ்சள் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை அதிகளவு பயிரிட்டு வருகின்றனர்.